தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து: சீனா கடும் அதிருப்தி!
திபெத் விவகாரத்தை சீனா கவனமாக கையாள்வதால் இதில் இந்தியா தலையிடுவதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது சீன அரசு.
ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 6) தமது 90-ஆவது பிறந்தநாளை ஹிமாசல பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள இல்லத்தில் கொண்டாடிய தலாய் லாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கும், அதன் தொடர்ச்சியாக கிரண் ரிஜிஜு உள்பட மத்திய அமைச்சர்கள் அன்னாரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதற்கும் எதிர்வினையாற்றியுள்ளது சீனா.
இது குறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் குறிப்பிடுகையில், “14-ஆவது தலாய் லாமாவாகிய இவர், சீன விரோத பிரிவினைவாத செயல்களில் நெடுங்காலமாக ஈடுபட்டு வருகிறார். மதத்தின் பெயரால் சீனாவிடமிருந்து க்ஸிஸாங்(அதாவது திபெத் பகுதியை சீனா க்ஸிஸாங் என்றே குறிப்பிடுகிறது) பிராந்தியத்தைப் பிரிக்க பார்க்கிறார்.
க்ஸிஸாங் விவகாரத்தில் இந்தியா மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இவ்விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சீனா எதிர்ப்பும் தெரிவித்துள்ளது” என்ரார்.
அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதில் சீனாவின் தலையீடு இருக்கக்கூடாது என்று திபெத் மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவிப்பதாக அமெரிக்க அரசும் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.