;
Athirady Tamil News

கென்யா அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! 11 பேர் பலி!

0

கென்யா நாட்டில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், அந்நாட்டு காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தலைநகர் நைரோபியில், ஆளும் அரசின் முறைகேடுகளை எதிர்த்தும், அதிபர் வில்லியம் ரூட்டோ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் ஏராளமான மக்கள் கடந்த சில வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் பல்வேறு இடங்களில் தீயிட்டு கொளுத்தியதாகவும், காவல் துறையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

கென்யாவில் கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதியன்று நடைபெற்ற மிகப் பெரியளவிலான மக்கள் போராட்டத்தின் மூலம் அந்நாடு ஒரே ஒரு கட்சியின் ஆட்சியிலிருந்து விடுபட்டு பலகட்சிகளுடைய ஜனநாயக நாடாக உருவானது.

சப சபா எனக் குறிப்பிடப்படும் அந்தப் போராட்டமானது , அந்நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுவதால், அதன் நினைவு நாளான நேற்று முன்தினம் (ஜூலை 7) நைரோபியின் முக்கிய சாலைகள் முடக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டன.

இந்நிலையில், பெரும்பாலான இளைஞர்கள் பங்கெடுத்த இந்தப் போராட்டத்தில், அவர்கள் மீது காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால், 11 பேர் பலியானதாகவும், 567 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு காவல் துறையின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான வாகனங்கள் சேதமடைந்ததுடன், 52 காவலர்கள் உள்ளிட்ட 63 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி காவல் துறையினர் அலுவலக சீருடைகள் இன்றி போராட்டக்காரர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

பல வாரங்களாக நடைபெறும் இந்தப் போராட்டங்கள் குறித்து, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கிப்சும்பா முர்கோமென் கூறியதாவது:

”அரசு வன்முறை போராட்டங்களை ஒரு போதும் அனுமதிக்காது மக்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

இருப்பினும், கடந்த மாதம் போராட்டத்தில் அந்நாட்டின் ஏராளமான காவல் நிலையங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றதால், வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட வேண்டும் என அமைச்சர் முர்கோமென் உத்தரவிட்டிருந்தார்.

இதேபோல், கடந்த ஜூன் 25 ஆம் தேதி காவல் துறையின் தாக்குதல்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 19 பேர் கொல்லப்பட்டதுடன், 400-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.