;
Athirady Tamil News

மயிலிட்டி துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு: வடமாகாண மீனவர்கள் வேதனை

0

மயிலிட்டித் துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களின் அதீத ஆக்கிரமிப்புக் காரணமாகவும், நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய றோலர்களாலும் தாம் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாக வடமாகாண மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தெல்லிப்பழை பிரதேசசெயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, மயிலிட்டித் துறைமுகம் தம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாகவும், அதைத் தம்மால் பயன்படுத்த முடியாதுள்ளதாகவும் வடக்கு மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் மீனவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
மயிலிட்டித் துறைமுகத்தை சீரமைத்துத்தரும் போது, அதன்மூலம் வடக்கு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். வடக்கு மீனவர்களின் பொருளாதாரம் உயரும் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், அந்தத் துறைமுகத்தின் முழுப் பயனையும் தென்னிலங்கை மீனவர்கள்தான் அனுபவிக்கின்றனர். வடக்கு மீனவர்களின் படகுகள் கட்டுவதற்குப் போதிய இடமில்லை. மிகச்சிறிய இடமொன்றே வழங்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களின்போது அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட றோலர் படகுகளும் அங்கே கட்டப்பட்டுள்ளன. அவையும் எமது சிறிய படகுகளுடன் மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன – என்றனர்.

இதையடுத்து, ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் முடிந்ததும், மயிலிட்டித்துறை முகத்துக்குக் கண்காணிப்புப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள களநிலைமைகளைப் பார்வையிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். இதற்கு அமைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும். நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வலிகாமம் வடக்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு வின்தலைவருமான ஸ்ரீபவானந்தராஜா, வலிகாமம் வடக்குப் பிரதேசசபையின் தவிசாளர் சோ.சுகிர்தன். தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் திருமதி சி.சுதீஸ்னர், வலிகாமம் வடக்குப் பிரதேசசபையின் செயலாளர் சி.சிவானந்தன், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் தெல்லிப்பழைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் நேரடியாகக் களவிஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.