;
Athirady Tamil News

தாய்லாந்துடன் ஹிந்து கோயில் பிரச்னை! போர் நிறுத்தம் கோரும் கம்போடியா!

0

தாய்லாந்து நாடுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர, போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையில் நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமையில் இரு நாட்டு எல்லைகளிலும் வெடித்த மோதலால் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.

இந்த மோதலால் 30-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்ததால், போர்நிறுத்தம் கோரி கம்போடியா அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்து – கம்போடியா ஆகிய இரு நாடுகளும் எல்லைகளைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்த எல்லைப் பகுதியில்தான், தாய்லாந்தின் சுரின் என்ற மாகாணமும், கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே என்ற மாகாணமும் அமைந்துள்ளது.

ஆனால், தாய்லாந்து நாட்டின் சுரீன் மாகாணத்தில் உள்ள பிரசாத் தா மோன் தோம் என்ற கோவில், தங்கள் நாட்டுடைய கோவில் என்று கம்போடியா சொந்தம் கொண்டாடுவதே, அண்டை நாடுகளுக்குள் சண்டை வருவதற்குக் காரணமாக உள்ளது.

இந்த கோவில் விவகாரம் அவ்வப்போது சூடுபிடித்து, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். அந்த நிலையில்தான், கம்போடியா படைகள் தாய்லாந்துக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம்சாட்டி, கம்போடியா மீது ஜெட் விமானங்களைக் கொண்டு வெடிகுண்டுகளை வீசின.

இந்த போர்ப் பதற்றம் குறித்து சர்வதேச நாடுகளும் கவலை தெரிவித்த நிலையில், போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது.

போர்ப் பதற்றம் மற்றும் இந்த சண்டை காரணமாக, கம்போடியா -தாய்லாந்து இடையேயான எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்த எல்லைத் தாண்டிய தாக்குதல் காரணமாக, இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் வணிகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.

இதனிடையே, கம்போடியாவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், அவசர உதவி தேவைப்படுமெனில் +855 92881676 என்ற தொலைபேசி எண்ணையோ [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.