வணிக வளாகத்தில் திடீர் கத்திக்குத்து! தாக்குதலால் 11 படுகாயம்; 6 பேர் கவலைக்கிடம்!
அமெரிக்காவில் தனியார் வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவரின் திடீர் தாக்குதலில் 11 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவில் மிக்ஸிகன் மாகாணம் டிராவர்சி நகரில் வால்மார்ட் வணிக வளாகத்தில் நுழைந்த ஒருவர், திடீரென அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினார்.
தன்னிடமிருந்த கத்தியைக் கொண்டு, கண்ணில் பட்டவர்களையெல்லாம் குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 11 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நூற்றுக்கணக்கான பேர் அலைமோதும் ஒரு வணிக வளாகத்தில் ஒருவரின் திடீர் வெறிச்செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும், அவர் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
