;
Athirady Tamil News

போக்குவரத்து சட்டவிதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் 25 கைப்பற்றல்-கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் சம்பவம்

0
video link-

பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர் பகுதிகளில் இன்று (29) வெள்ளிக்கிழமை மாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது மோட்டார் சைக்கிள் ஆவணம் காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது தலைக்கவசம் அணியாது செல்வது , ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது , அதிவேகமாக செல்வது , மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை உள்ளிட்ட பொது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதனை ஓட்டிய சந்தேக நபர்கள் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இச்சோதனை நடவடிக்கையானது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர ஆலோசனையில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி நெறிப்படுத்தலில் அம்பாரை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி நஸீர் உள்ளிட்ட பொலிஸார் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மேலும் இன்றைய தினம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் சுமார் 05 வீதி விபத்துக்கள் இடம்பெற்றிருந்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விபத்துக்களை குறைப்பதற்கு நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் உடனடியாக அதனை அகற்றவேண்டும்.இன்று முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்முனை தலைமையக மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி நஸீர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துதல், வேகமாக வாகனங்களை செலுத்துதல், தலைக்கவசம் இன்றி வாகனம் செலுத்துதல் போன்ற பல்வேறுபட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.இங்கு 80 வீதமானவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியே தமது வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.

குறிப்பாக தலைக்கவசம் அணியாது செல்கின்றார்கள். வேகமாக பயணிக்கின்றார்கள். நகரப்புறங்களிலும் வேகமாக வாகனங்களை செலுத்துகின்றார்கள். வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தக் கூடியவாறு வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக மாநகர பகுதியில் வீதி விபத்துகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதால் அந்த பகுதிகள் விசேட பொலிஸ் அணியினரால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விசேட வேலை திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த விடயத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

மேலும் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து செயற்படுவதன் மூலம் வீதி விபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.