;
Athirady Tamil News

சைபர் தாக்குதல் எதிரொலி: ஜப்பானில் ‘பீர்’ தட்டுப்பாடு!

0

ஜப்பானின் பழம்பெருமை வாய்ந்த பீர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ‘ஆசாஹி’ மீது இணையவழி(சைபர்) தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்றும் (வெள்ளிக்கிழமை) முடங்கியுள்ளன. இதனால், ஜப்பானில் ஆசாஹி நிறுவன பொருள்களுக்கு கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த 1949-இல் நிறுவப்பட்ட ஆசாஹி குழுமம், பீர் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. அந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான சூப்பர் ட்ரை பீர், பாட்டில்ட் டீ (புட்டிகளில் அடைத்து விற்கப்படும் தேநீர்) மட்டுமில்லாது பிற தயாரிப்புகளான குழந்தைகளுக்கான உணவுகள், மிட்டாய்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களும் ஜப்பானிய அங்காடிகளை பன்னெடுங்காலமாக அலங்கரித்து வருகின்றன.

இந்தநிலையில், அந்நிறுவனத்தின் மென்பொருள் தொழில்நுட்பத்தில் கடந்த திங்கள்கிழமை சைபர் தாக்குதலால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருள்கள் தயாரிப்பு, பதப்படுத்துதல், ஏற்றுமதி உள்பட அனைத்துவித செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், ஐரோப்பிய நாடுகளுக்கான வணிகம் பாதிப்படையவில்லை என்று ஆசாஹி நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி(சைபர்) தாக்குதல் எப்படி எதனால் நடந்தது? என்பதைக் கண்டறிய முற்பட்டிருப்பதாகவும், நிறுவன செயல்பாடுகளைக் மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், எனினும், இதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம் என்றும் ஆசாஹி குழுமம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.