நோபல் கிடைக்காவிட்டால் என்ன? அதைவிட பெரியது கிடைத்துவிட்டது: டிரம்ப்
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது குறித்து, வெள்ளிக்கிழமை மாலை பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விருது வென்ற மரியா கொரினா மச்சாடோ, என்னைத் தொடர்புகொண்டு, அந்த விருதுக்கு நான்தான் உரியவன் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டின் அமைதி நோபல் பரிசு தனக்கே வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிா்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, முதலில், வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. அமைதிக்கான நோபல் பரிசளிப்பதில் தோ்வுக் குழு அரசியல் செய்வதாக அமெரிக்க அதிபா் மாளிகை விமா்சித்திருந்தது. அமைதிக்கான நோபல் பரிசு பெறும் விருதாளரைத் தோ்வு செய்வதில் அமைதிக்கு அளிக்கப்பட்ட பங்களிப்பைக் கருத்தில் கொள்வதைவிட, அரசியல் செய்வதற்கு பரிசுத் தோ்வுக் குழு முன்னுரிமை அளிக்கிறது. இதை டிரம்ப்பை தோ்வு செய்யாமல் மரியாவை தோ்வு செய்ததன் மூலம் தோ்வுக் குழு மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.
#WATCH | US President Donald J Trump says, “The person who got the Nobel Prize called me today and said, ‘I’m accepting this in honour of you because you really deserved it’… I didn’t say, ‘Give it to me’, though. I think she might have… I’ve been helping her along the… pic.twitter.com/XY1HH1OG5x
— ANI (@ANI) October 10, 2025
ஆனாலும், வழக்கம் போல, அமைதி ஒப்பந்தங்கள், போா்களை நிறுத்துவது, மனித உயிா்களைக் காப்பாற்றுவது ஆகிய பணிகளை அதிபா் டிரம்ப் தொடா்வாா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச அளவில் பல்வேறு போர்களை தானே தடுத்து நிறுத்தியதாகவும், அதனால் இந்த ஆண்டின் அமைதி நோபல் பரிசை பெற தான் விரும்புவதாகவும் கிட்டத்தட்ட நாள்தோறும் கூறி வந்தார். ஆனால், அது தனக்கு இல்லை என்று தெரிந்ததும், அதிருப்தி அடைந்தார். ஆனால் அனைத்தும் ஒரே அழைப்பில் சரியாகிப் போனது.
நோபல் பரிசு வென்ற தலைவா் மரியா கொரினா மச்சாடோ, அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இது பற்றி டிரம்ப் கூறுகையில், உண்மையில் நோபல் பரிசு வென்றவர் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். உங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தப் பரிசை நான் பெற்றுக் கொள்கிறேன். உண்மையில் இந்த பரிசுக்கு நீங்கள்தான் உரித்தானவர் என்று கூறினார். இது மிகவும் சிறந்தது என்று டிரம்ப் உள்ளம் குளிர்ந்து பேசியிருக்கிறார்.
மேலும், மச்சாடோவிடம் தான் கேட்டிருந்தால் தனக்கே விருதை வழங்கியிருப்பார் என்றும் டிரம்ப் கூறினார். நான், அப்படியானால் எனக்குக் கொடுங்கள் என்று சொல்லவில்லை, ஆனால் அவர் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் மிகவும் நல்லவர் என்று டிரம்ப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
இவர் பேசியது உண்மையா என்று பலரும் சந்தேகிக்கலாம், ஆனால் அது உண்மைதான் என்பதை உறுதி செய்யும் வகையில், மரியா, முன்பே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இதனைப் பதிவிட்டிருந்தார். மரியா கொரினா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு அறிவித்ததன் மூலம், வெனிசுலா மக்களின் போராட்டத்துக்குப் பெரும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. துயரத்தில் உள்ள வெனிசுலா மக்களுக்கும் எங்கள் போராட்டத்துக்கு உறுதியான ஆதரவு அளித்த அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கும் இந்தப் பரிசை அா்ப்பணிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.