போக்குவரத்து நெரிசலில் 12 மணி நேரம் சிக்கி தவித்த 500 மாணவர்கள்
மும்பை தாதர் மற்றும் மால்வாணியில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்த 5 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 500 மாணவ- மாணவிகள் 12 பஸ்களில் பால்கர் மாவட்டம் விரார் அருகே உள்ள கேளிக்கை விடுதிக்கு நேற்று முன்தினம் காலையில் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு மாலையில் மீண்டும் மாணவ, மாணவிகள் பஸ்களில் மும்பை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தனர். மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வந்தபோது, போக்குவரத்து நெரிசலில் 12 பள்ளி பஸ்களும் சிக்கிக்கொண்டன. அங்கு பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.
வெகுநேரமாக பஸ்கள் ஒரே இடத்தில் நின்றதாலும், பஸ்சில் காற்றோட்டம் இல்லாததாலும் அதில் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு மயக்கம், பசி, தாகம் ஏற்பட்டு கடுமையாக சோர்வடைந்தனர். சில மாணவிகள் வாய்விட்டு கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையே தகவல் அறிந்த உள்ளூர் சமூகநல தொண்டு அமைப்பினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பஸ்களில் சிக்கி இருந்த சுமார் 500 மாணவ-மாணவிகளுக்கு குடிக்க தண்ணீர், பிஸ்கெட் பாக்கெட்டுகளை வினியோகம் செய்து, பசியாற வைத்தனர். மேலும் போக்குவரத்தை போலீசாருடன் சேர்ந்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய போராடி வாகன நெரிசலில் சிக்கி தவித்த 12 பள்ளி பஸ்களையும் நெரிசலில் இருந்து மீட்டு மும்பைக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து நெரிசலில் சுமார் 12 மணி நேர சிக்கி தவிப்புக்கு பிறகு நேற்று காலை 6 மணி அளவில் 12 பஸ்களும் பள்ளிகளுக்கு வந்தடைந்தது. அங்கு காத்திருந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆரத்தழுவி வரவேற்று வீட்டுக்கு அழைத்து சென்றனர்.