அமெரிக்காவிற்கு உலோக ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா
அமெரிக்காவிற்கான முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடையை சீனா தற்காலிகமாக நீக்கியுள்ளது.
சீனாவின் வர்த்தக அமைச்சகம், 2024-ல் அறிவித்திருந்த முக்கிய உலோகங்களான கலியம் (Gallium), ஜெர்மேனியம் (Germanium), அன்டிமனி (Antimony) மற்றும் சூப்பர்-ஹார்ட் பொருட்களின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி தடையை 2025 நவம்பர் 9 முதல் 2026 நவம்பர் 27 வரை தற்காலிகமாக நீக்கியுள்ளது.
இந்த நடவடிக்கை, 2026-ம் ஆண்டை முன்னிட்டு சீனா-அமெரிக்கா இடையேயான வர்த்தக பதற்றங்களை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரட்டை பயன்பாட்டுக்குரிய கிராஃபைட் (Graphite) ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கடுமையான சரிபார்ப்பு நடைமுறைகளும் (end-user and end-use) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனுடன், அக்டோபர் 9-ல் அறிவிக்கப்பட்ட சில அரிய பூமி உலோகங்கள் மற்றும் லித்தியம் பேட்டரி பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளும் சீன அரசு தற்காலிகமாக நீக்கியுள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இடையேயான சமீபத்திய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இரு தலைவர்களும் வரி கட்டுப்பாடுகளை குறைத்து, மற்ற வர்த்தக நடவடிக்கைகளை ஒரு வருடத்திற்கு இடைநிறுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள், உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி துறைகளில் நிலவும் உலோக தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சர்வதேச வர்த்தக நிலைமையை சீராக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.