;
Athirady Tamil News

பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் – துரித கெதியில் சீரமைப்பு பணிகள்

0

பேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் அபிராமி வித்யாபரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட வீதிகளைப் பார்வையிட்ட வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாகத் மீட்டெடுக்கும் வகையில் சேதமடைந்த வீதிகளைத் தற்காலிகமாகவேனும் உடனடியாகச் சீரமைக்குமாறு விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே இந்தத் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, அரச திணைக்களங்கள், இராணுவம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் பின்வரும் வீதிகள் மிகக் குறுகிய காலத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன:

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் பண்ணை வீதி 40 மீற்றர் திருத்தப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை – கேப்பாப்பிலவு – புதுக்குடியிருப்பு வீதியில் 25 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் பூவரசன்குளம் – செட்டிக்குளம் வீதி 50 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

மாந்தைமேற்கில் மாந்தை பரப்புக்கடந்தான் வீதி 5 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது. கட்டாடுவயல் – இராமயன்குளம் வீதி 500 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது. மகிழங்குளம் – பள்ளமடு வீதி 40 மீற்றர் திருத்தப்பட்டு வருகின்றது.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பேரிடரால் நேற்று திடீரென சேதமடைந்த கற்சிலைமடு பேராறுப்பாலம், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் உடனடியாகத் திருத்தியமைக்கப்பட்டுப் பொதுமக்களின் போக்குவரத்துக்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான ஏனைய வீதிகளிலும் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீர்செய்யும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யத் திணைக்களம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.