;
Athirady Tamil News

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க விசேட ‘ஒப்பரேசன்’ – அமைச்சர் சந்திரசேகர்

0

“வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்தியா ஒரு புறத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில் இந்திய மீனவர்கள் இந்த இடர் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளாமல் எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி எங்கள் கடல் வளங்களை அள்ளிச் செல்கிறார்கள். இது நியாயமற்றதொன்றாகும்.

எனவே இந்திய மீனவர் அத்துமீறலைக் கட்டுப்படுத்த எமது மீனவர்களும் அமைச்சும் இணைந்து விசேட ‘ஒப்பரேசன்’ ஒன்று முன்னெடுக்கப்படும்’ என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஒரு பெரும் வெள்ள அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. இந்த அனர்த்தத்தால் எமது மீனவர்களும் மோசமாக பாதிக்கப்பட்டிருகின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா ஒரு புறம் மனிதாபிமான உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கின்றது. அது எமக்கு ஆறுதலைத் தருகிறது.

ஆனால் மறுபுறத்தில் இடர் நிலைமையையும் கவனத்திற் கொள்ளாது இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக எமது கடற்பரப்புக்குள் பிரவேசித்து எமது கடல் வளங்களைச் சூறையாடிச் செல்கின்றார்கள். இது நியாயமான ஒரு செயற்பாடு அல்ல.

இது குறித்து நாங்கள் பல தடவைகள் பல தரப்புக்களுடனும் பேசிவிட்டோம். ஆனால் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக இல்லை. மாறாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

தொப்புள் கொடி உறவுகள் என்கிறார்கள். ஆனால் அந்த தொப்புள் கொடி உறவுகளின் வளங்களை அள்ளிச் செல்வது சரியானதா? தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விடயத்தில் பொறுப்புடன் நடந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி இந்த விடயத்தில் அதிக அக்கறை செலுத்தி எமது கடல் வளம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுடன் பேசவேண்டும்.

இவ்வாறு இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடரும் பட்சத்தில் அதனைத் தடுப்பதற்கு எமது மீனவர்களும், அமைச்சும் இணைந்து ‘விசேட ஒப்பரேசன்’ ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.