சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 36 பேர் உள்பட 63 நக்சல்கள் சரண்!
சத்தீஸ்கரில், தேடப்பட்டு வந்த 36 பேர் உள்பட 63 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
தண்டேவாடா மாவட்டத்தில், 18 பெண்கள் உள்பட 63 நக்சல்கள் இன்று (ஜன. 9) காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில், மாநில அரசின் நக்சல்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களின் மூலம் ஈர்க்கப்பட்டு அவர்கள் அனைவரும் சரணடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதில், சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளில் அதிகப்படியாக 7 பேர் மீது தலா ரூ.8 லட்சம் வெகுமதி உள்பட சுமார் 36 பேரைப் பிடிக்கக் கூட்டாக ரூ.1.19 கோடி அறிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் உடனடியாக ரூ.50,000 மறுவாழ்வு நிதியாக வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சத்தீஸ்கரில் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,500-க்கும் அதிகமான நக்சல்கள் சரணடைந்துள்ளனர். மேலும், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாட்டில் உள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.