;
Athirady Tamil News

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

0

வங்கதேச சிறையில் இருந்துவந்த அந்நாட்டுப் பாடகர் புரோலாய் சாகி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) காலமானார்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாப்னா மாவட்ட சிறை கண்காணிப்பாளர் உமர் ஃபரூக் பேசியதாவது:

”பாடகர் புரோலாய் சாகி நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், சிறையில் இருந்த மருத்துவர்கள் அவரை பாப்னா சர்தார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் அங்கிருந்து வெள்ளிக்கிழமை இரவு ராஜ்ஷாகி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் கிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அவர் காலமானார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த பாடகர் புரோலாய் சாகி, பாப்னா மாவட்ட கலாசாரத் துறை செயலாளராக இருந்தவர்.

2024 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான மாணவர் போராட்டத்தின் எதிரொலியாக அந்நாட்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதனால், அந்நாட்டில் இருந்த அவாமி லீக் கட்சி நிர்வாகிகளை இடைகால அரசின் காவல் துறையினர் கைது செய்தனர். அந்தவகையில் பாடகர் புரோலாய் சாகியும் கைது செய்யப்பட்டு பல்வேறு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.

சிறையில் இருந்தபோது சாகிக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் சிறை நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.