;
Athirady Tamil News

உலகெங்கும் தமிழர்களுக்கு ; ஜனாதிபதி அநுரவின் தைப்பொங்கல் வாழ்த்து செய்தி

0

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் இன்று தைப்பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

விவசாய செழிப்புக்கு உதவிய சூரியக் கடவுள், கால்நடைகள் மற்றும் இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் உன்னத நாளாக தைப்பொங்கல் அமைகிறது.

இது வெறும் அறுவடைத் திருவிழா மட்டுமல்ல, எதிர்காலத்தை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதற்கான ஒரு புதிய தொடக்கம் என ஜனாதிபதி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நாடு எதிர்கொண்ட பாரிய இயற்கை அனர்த்தத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதிலிருந்து மீண்டெழும் முயற்சியில் மக்கள் காட்டிய உறுதியை வெகுவாகப் பாராட்டினார்.

இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாடுகளில் நாடு கைகோர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்பும் இந்த வேலைத்திட்டத்தில் அனைவரும் மென்மேலும் வலுவாக ஒன்றிணைய வேண்டும் என அவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.

இயற்கையுடன் ஆழமாகப் பிணைந்துள்ள தைப்பொங்கல் பண்டிகை, தற்கால சூழலில் சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

“எந்தவொரு இருளுக்குப் பிறகும் ஒளி பிறக்கும் என்பது நமது உறுதிமிக்க நம்பிக்கை. சவால்களை ஒற்றுமையுடன் வென்று, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற இலக்கை நோக்கி பயணிப்போம்” என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் தனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.