;
Athirady Tamil News

மேகாலயா சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

0

மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை நேற்று (பிப்ரவரி 6) 25 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 18 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 7 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக மேகாலயா டிஜிபி நோங்ராங் உறுதிப்படுத்தியுள்ளார்.

உம்சங்காட் கிராமத்தில் உள்ள தாங்ஸ்கு பகுதியில் இயங்கி வந்த இந்த சட்டவிரோத சுரங்கத்தில், நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணியளவில் சக்திவாய்ந்த வெடி விபத்து நிகழ்ந்தது. டைனமைட் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி நிலக்கரி எடுக்கும்போது இந்த விபத்து நேரிட்டதாகக் கருதப்படுகிறது.

சுரங்கத்திற்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது வரை 12 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தத் துயரச் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் மற்றும் மாநில அரசின் சார்பில் தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்கமா, சட்டவிரோத சுரங்க உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இது தொடர்பாக நிலக்கரி சுரங்க உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2014-ம் ஆண்டு முதல் மேகாலயாவில் எலி வளை சுரங்க முறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தும், இத்தகைய சட்டவிரோதச் செயல்பாடுகள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.