பிரித்தானியாவில் இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் ; புதிய விசா சட்டத்தால் வினை
பிரித்தானியாவின் விசா விதிகளில் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்கியிருக்கும் இலங்கையர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதி (ILR) பெறுவதற்கான குறைந்தபட்ச கால அளவை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தலாம் என பிரித்தானியாவில் முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த பெண்
கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ள சுமார் 26 லட்சம் பேர் இந்தப் புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர்.
இந்த புதிய சட்டத்தால் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஏற்பட்ட சிக்கல் தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டள்ளது.
இலங்கையை சேர்ந்த பெண் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் பிரித்தானியாவில் வசித்தபோது இலங்கையில் தொழில் செய்து வந்த அவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஆனால் விசாவில் பிரச்னை ஏற்பட்டதால் தனது கணவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில்கூட தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்று கவலையுடன் தெரிவிக்கிறார்.
“நாங்கள் அவரின் இறுதிச் சடங்கிற்குச் செல்ல முடியவில்லை. அப்போது எங்களின் விசாவை புதுப்பிக்க வேண்டிய நேரமாக இருந்ததுதான் அதற்குக் காரணம். விசா புதுப்பிக்கும் காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறினால் விசா ரத்து செய்யப்படும். அதற்குப் பிறகு புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
புதிய சட்டத்தின்படி நாங்கள் உடன் யாரையும் அழைத்து வர முடியாது. அதனால்தான் நாங்கள் யாரும் எனது கணவரின் இறுதிச் சடங்கிற்குக்கூட செல்ல முடியவில்லை,” என்று தெரிவித்தார்.
இந்தச் சூழலில் தற்போது பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டினரை பாதிக்காதவாறு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைக்கிறார்.