;
Athirady Tamil News

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு(video)

0
பாறுக் ஷிஹான்
video link-
 
சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அனைத்துப் பள்ளிவாசல்களிடமும் எழுத்துமூலம் மன்னிப்புக் கடிதம் பெற்றுச் சமர்ப்பிக்குமாறு நீதவான் நூர்டீன் சர்ஜூன் கட்டளை- வழக்கு ஒத்திவைப்பு.

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய காணொளியைத் தொடர்ந்து, வீதிகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை இயக்கி பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இன்று (16) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ

குறித்த வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்களான இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல், ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று மற்றும் நான்கு பேர் பயணித்ததுடன், வீதியை மறித்து ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டிருந்தமை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வைரல் வீடியோ ஆதாரங்கள் மூலம் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இவர்களின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தரப்பிலிருந்து பொலிஸ் மா அதிபருக்கு (IGP) முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சம்மாந்துறை நீதவானின் அதிகாரப்பூர்வ வாகனத்தின் முன்னிலையிலும் இவர்கள் இதேபோன்ற ஆபத்தான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றின் அதிரடி கட்டளை

இந்நிலையில், சந்தேகநபர்களின் இந்தச் செயற்பாடு பொதுமக்களுக்கு பெரும் இடையூறையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளமை கருதி, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி நூர்டீன் சர்ஜூன் விசேட உத்தரவொன்றைப் பிறப்பித்தார்.

சம்மாந்துறை பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிடமும் குறித்த இளைஞர்கள் மன்னிப்பு கோரி, அதற்கான எழுத்து மூலமான கடிதங்களைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், அந்த மன்னிப்புக் கடிதங்களைச் சமர்ப்பித்த பின்னரே, இந்த வழக்கை மேலும் முன்னெடுக்க முடியும் என அறிவித்த நீதிபதி, வழக்கை அடுத்த கட்ட விசாரணைக்காக ஒத்திவைத்துள்ளார்.

சட்டத்தரணி கருத்து

இந்தத் தீர்ப்பு குறித்து சிரேஷ்ட சட்டத்தரணி அன்வர் ஸியாத் கருத்துத் தெரிவிக்கையில், வீதிப் பாதுகாப்பை மீறும் மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை இந்த உத்தரவு மிகத் தெளிவாக வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

 
You might also like

Leave A Reply

Your email address will not be published.