;
Athirady Tamil News

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 12 ஆம் வகுப்பு மாணவன்; பறிபோன உயிர்

0

இந்தியாவில் 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள புக்கியா கிராமத்தில் ‘நவஜீவன்’ என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 5, 2026 அன்று, பிரியங்கா (28) என்ற பெண் பிரசவத்திற்காக அந்த கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த கிளினிக்கின் உரிமையாளர் யோகேஷ் வர்மா, தான் ஒரு மருத்துவர் என்று கூறி அப்பெண்ணைச் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். ஆனால், பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் அந்தப் பெண் அறுவை சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்தார்.

பெண்ணின் மரணத்திற்குப் பிறகு அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த கிளினிக் ஒரு போலி நிறுவனம் என்பது தெரியவந்தது.

மேலும், அறுவை சிகிச்சையின் போது ஒரு தகுதி வாய்ந்த மருத்துவர் கூட அங்கு இல்லை என்பதும், யோகேஷ் வர்மா என்ற 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் அந்தப் பெண்ணிற்குப் பிரசவம் பார்த்துள்ளான் என்பதும் அம்பலமானது.

முறையான மருத்துவ அறிவு இல்லாத ஒருவர் அறுவை சிகிச்சை செய்ததால், அப்பெண்ணிற்கு அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிர் பிரிந்தது விசாரணையில் உறுதியானது. சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் போலி கிளினிக் உடனடியாக சீல் வைக்கப்பட்டது.

தலைமறைவாக இருந்த 12-ம் வகுப்பு மாணவன் யோகேஷ் வர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அந்த கிளினிக்குடன் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மருத்துவர் என்று நம்பிச் சென்ற இடத்தில், மாணவன் ஒருவன் அறுவை சிகிச்சை செய்ததால் ஒரு உயிர் பறிபோனது அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.