;
Athirady Tamil News

இதுதான் ஏ.ஐ… பிரான்ஸ் ஜனாதிபதி-பிரதமர் மோடி ஒன்றாக நிற்கும் புகைப்படம் சமூக ஊடகத்தில் பதிவு

0

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 16-ந்தேதி தொடங்கி வைத்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் மோடியின் அழைப்பையேற்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா நாட்டு ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற கூடிய முதல் உச்சி மாநாடு என்ற அளவில் அது பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில், கஜகஸ்தான், பின்லாந்து, மொரீசியஸ், பூடான், நெதர்லாந்து, கிரீஸ், குரோசியா நாட்டு பிரதமர்களையும், ஸ்பெயின், சுலோவேக்கியா, இலங்கை, எஸ்தோனியா நாட்டு ஜனாதிபதிகளையும் பிரதமர் மோடி இன்று வரவேற்றார்.

இதேபோன்று, சர்வதேச அமைப்புகளான ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் ஜெனரல் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா ஆகியோரையும் கயானா, பொலிவியா மற்றும் செச்சல்ஸ் நாடுகளின் துணை ஜனாதிபதிகளையும் அவர் வரவேற்றார்.

இந்த உயர்மட்ட தலைவர்களின் வருகையானது, செயற்கை தொழில் நுட்பம், புதிய கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் போன்றவற்றில் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் இந்தியாவின் தலைமைத்துவம் சுட்டி காட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஏ.ஐ. உருவாக்கிய புகைப்படம் ஒன்றை பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் ஜனாதிபதி ஒன்றாக நிற்பது போன்ற காட்சி உள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில், நண்பர்கள் இணையும்போது, புதிய கண்டுபிடிப்பும் தொடருகிறது. ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டுக்கு தயார் என தெரிவித்து உள்ளார். இந்த உச்சி மாநாட்டில், ஏ.ஐ.-யால் மேற்கொள்ளப்படும் தீர்வுகள், பொருளாதார வளர்ச்சி, நீடித்த முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்பத்தில் நட்புறவு போன்றவற்றை தலைவர்கள் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2025-ம் ஆண்டு பாரீசில் நடந்த ஏ.ஐ. செயல் உச்சி மாநாட்டின் சர்வதேச அளவிலான முயற்சிகளின் அடுத்த நிலையாக உள்ள இந்த உச்சி மாநாட்டில், ஏ.ஐ.-யின் எதிர்காலம் பற்றி விவாதம் செய்யும் வகையில் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப செயலதிகாரிகள் ஒன்றிணைந்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.