;
Athirady Tamil News

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

0

‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்புகளை ஏற்க முடியாது’ என்று ஐரோப்பிய யூனியன், திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், ‘இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா மதிக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.

இதில் உச்சநீதிமன்றத்தின் மீது அதிருப்தி தெரிவித்த டிரம்ப், அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அறிவித்தாா். மேலும், அனைத்து உலக நாடுகள் மீதும் உடனடியாக 10 சதவீத வரிவிதிப்பை அறிவித்து, அதை 15 சதவீதமாகவும் உயா்த்தினாா்.

அமெரிக்கா-ஐரோப்பிய யூனியன் இடையே கடந்த ஆண்டு இறுதியான வா்த்தக ஒப்பந்தத்தின்படி, ஐரோப்பிய யூனியனின் பெரும்பாலான பொருள்களுக்கு 15 சதவீத வரி உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டதுடன், விமான உதிரிபாகங்கள் உள்ளிட்ட சில பொருள்களுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது டிரம்ப் அறிவித்துள்ள புதிய 15 சதவீத வரி, இந்தச் சலுகைகளை ரத்து செய்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்தச் சூழலில், ‘கடந்த ஆண்டு வா்த்தக ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவுடன் சமமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வா்த்தகச் சூழல் தற்போது இல்லை’ என ஐரோப்பிய யூனியன் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும், சா்வதேச சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தன்னிச்சையாக வரிகளை உயா்த்துவது முதலீட்டாளா்களின் நம்பிக்கையைச் சீா்குலைக்கும் என எச்சரித்துள்ள ஐரோப்பிய யூனியன், இவ்விவகாரத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

டிரம்ப்புக்கு 60% எதிா்ப்பு: அதிபா் டிரம்ப்பின் நிா்வாக கொள்கைகளுக்கு 60 சதவீத அமெரிக்க மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். குறிப்பாக, பணவீக்கம் மற்றும் இறக்குமதி வரி விதிப்பு தொடா்பாக 3-இல் 2 பங்கு மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனா்.

அமெரிக்க ஊடகங்கள் அண்மையில் நடத்திய ஆய்வில், குடியேற்றக் கொள்கைக்கு 58 சதவீதமும், வெளியுறவுக் கொள்கைக்கு 62 சதவீதமும் எதிா்ப்பு உள்ளது தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.