;
Athirady Tamil News

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான சித்திரவதை – விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு

0

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தையிட்டி விகாரைக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வேலன் சுவாமி, வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ் , வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதலை மேற்கொண்டு பொலிஸார் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி மற்றும் வலி. கிழக்கு தவிசாளர் ஆகியோர் மறுநாள் யாழ் . போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றனர்.

பொலிசாரின் தாக்குதல் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராக வலி. கிழக்கு தவிசாளர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ், இன்றைய தினம் புதன்கிழமை முறைப்பாட்டாளரையும் , எதிராளியான பொலிஸாரையும் தமது அலுவலகத்திற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டார்.

குறித்த விசாரணைகள் தொடர்பில் வலி. கிழக்கு தவிசாளர் தெரிவிக்கையில்.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடிய எம் மீது பொலிஸார் சித்திரவதைகளை புரிந்து உடல்உள ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தி எம்மை கைது செய்தனர்.

அரசாங்கத்தின் திட்டமிட்ட அறிவுறுத்தலின் பிரகாரமே பொலிஸார் எம்முடன் அவ்வாறு நடந்து கொண்டனர் என வலுவான சந்தேகம் எமக்கு உண்டு.

இன்றைய விசாரணைகளின் போது, விகாரைக்கு சிங்கள மக்களும் வருகை தந்தமையால் , போராட்ட காரர்களுக்கும் , சிங்கள மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படாது தடுக்கவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தோம்.

அவர்களை கைது செய்யும் போது குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டோம் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் எம்மை தேடி தேடி கைது செய்ததுடன் , பொலிசாரின் தடைக்கு அப்பால் எம்மை இழுத்து சென்று எம் மீது தாக்குதல் மேற்கொண்டே வாகனத்தில் ஏற்றினார்கள் என விடயத்தினையும் விசாரணைகளில் நான் தெரிய படுத்தினேன் .

எம் மீதான தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பிலான ஆதாரங்கள் , சாட்சியங்கள் , அறிக்கைகள் என்பவற்றை எதிர்வரும் 14 நாட்களுக்குள் தமக்கு சமர்ப்பிக்குமாறும் , அதன் பின்னர் கொழும்பு அலுவலகத்திற்கு மேலதிக நடவடிக்கைக்காக தாம் அனுப்பி வைப்போம் என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார் என தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.