;
Athirady Tamil News

அமெரிக்கா- இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் இதுவரை 1,444 பேர் உயிரிழப்பு

0

டெஹ்ரான்,

ஈரானில் கடந்த 28-ந் தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது. இதைத்தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் முதல் முறையாக நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அதில் ஈரானில் கொல்லப்பட்ட பள்ளி மாணவிகள் உள்ளிட்டோருக்காக பழிவாங்கப்படும் என சூளுரைத்து இருந்த அவர், அமெரிக்க படைத்தளங்கள் அமைந்திருக்கும் அண்டை நாடுகளை தொடர்ந்து தாக்குவோம் என்றும் மிரட்டல் விடுத்திருந்தார். அந்த நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை மூடுமாறு அறிவுறுத்திய அவர். தங்களை அமெரிக்கா பாதுகாக்கிறது என்ற கருத்து வெறும் பொய்யைத்தவிர வேறு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 1,444 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 18,551 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானில் இதுவரை 6 ஆயிரத்துக்கு அதிகமான இலக்குகளை தாக்கியதாகவும், 30-க்கும் மேற்பட்ட கண்ணிவெடி பதிக்கும் கப்பல்களை தகர்த்த தாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக வருடாந்திர குத்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெஹ்ரானில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இஸ்ரேல் மற்றும் அமெரிக் காவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த நிகழ்வுக்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக அந்த பகுதியில் பெருமளவில் வான்தாக்குதல் நடந்தது. அங்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதியே குலுங்கியது. ஈரானில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் 200-க்கு மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதில் ஏவுகணை செலுத்தும் தளங்கள், பாதுகாப்பு அமைப்புகள், ஆயுத உற்பத்திக்கூடங்களில் குண்டுவீசியதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்து இருந்தது.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தனது சமூக ஊடக பக்கத்தில், ‘இந்த மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஈரானின் கடற்படை, விமானப்படை, ஏவுகணைகள், டிரோன்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டது. அவர்களது தலைவர்களும் இந்த பூமியில் இருந்து அகற்றப்பட்டு உள்ளனர்’ என குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக இந்த போர் தொடர்பாக அவர் கூறும்போது, ‘ஈரானின் பயங்கரவாத ஆட்சியை ராணுவம், பொருளாதாரம் என அனைத்து வகையிலும் மொத்தமாக அழித்து விட்டோம். அவர்கள் 47 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள அப்பாவி மக்களை கொலை செய்து வருகின்றனர். தற்போது அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக அவர்களை நான் கொன்று வருகிறேன். இது எவ்வளவு பெரிய கவுரவம்’ என குறிப்பிட்டு இருந்தார்.

வளைகுடாவில் தொடர்ந்து நீடிக்கும் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடும் நீடித்து வருகிறது. இதன் மூலம் சர்வதேச நாடுகளை இந்த போர் வெகுவாக பாதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.