;
Athirady Tamil News

நேபாளத்தில் புதிய பிரதமர் அதிரடி; முன்னாள் பிரதமர் கைது

0

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சனிக்கிழமை (மார்ச் 28) அதிகாலை அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய பிரதமராக பதவியேற்ற பாலன் ஷா (Balen Shah) தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘Gen Z’ இளைஞர் போராட்டங்களை ஒடுக்கி வன்முறை
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளத்தில் இடம்பெற்ற ‘Gen Z’ இளைஞர் போராட்டங்களை ஒடுக்கியதில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

அந்த போராட்டங்களின் போது சுமார் 77 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களாக முன்னாள் பிரதமர் ஒலி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதே வழக்கில் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் லேக்காக் (Ramesh Lekhak ) காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

நேபாளத்தின் தேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளின் பக்தாபூர் மாவட்டத்தின் குண்டு பகுதியில் உள்ள தனது இல்லத்தில் இருந்த சர்மா ஒலி அதிகாலை 5 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார் திடீரென இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பாலன் ஷா பிரதமராக பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் இந்த கைது இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது நேபாள அரசியலில் பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

நேபாள தேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கைது நடவடிக்கை நேபாள அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.