ஈரானில் 30 நாட்களாக இணைய முடக்கம் ; வெளி உலகத்துடன் தொடர்பு துண்டிப்பு
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய போர் ஆரம்பமானது முதல், அந்நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள இணையத்தள முடக்கம் இன்றுடன் 30 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் வெளி உலகத்துடனான தொடர்புகளை இழந்து தவிக்கின்றனர்.
இணையத்தள கண்காணிப்பு அமைப்பான NetBlocks வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானின் இணைய முடக்கம் தற்போது 696 மணித்தியாலங்களைக் கடந்து ஐந்தாவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது.
இது அந்நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட கால இணைய முடக்கமாகப் பதிவாகியுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வசிக்கும் மக்கள் இது குறித்து மிகுந்த அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் “இணையம் இல்லாத வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. வெளிநாட்டுத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் சிக்னல் தடைகளால் முடக்கப்பட்டுள்ளன.
அரசுத் தொலைக்காட்சியைத் தவிர எமக்கு வேறு செய்தி ஆதாரங்கள் இல்லை” என 37 வயதான சந்தைப்படுத்தல் முகாமையாளர் அர்ஷியா தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடிவதாகவும், ஆனால் அது போதுமானதாக இல்லை என்றும், இதனால் தாம் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.