குழந்தையின் கண் முன்னே தந்தைக்கு நேர்ந்த பயங்கரம்: திடுக்கிடவைத்துள்ள ஒரு செய்தி
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நபர், தன்னைப் பிரிந்து சென்ற மனைவியைத் தேடிச் சென்ற நிலையில், தன் குழந்தையின் கண் முன்னாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மனைவியைத் தேடிச் சென்ற கணவர்
தமிழ்நாட்டிலுள்ள குடியாத்தம் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் காந்தி. காந்தியின் மனைவி ராசாத்தி. தம்பதியருக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
சமீபத்தில் ராசாத்தி தன் கணவனையும் குழந்தையையும் விட்டு விட்டு நரசிம்முலு என்னும் நபருடன் வாழ ஆந்திராவுக்குச் சென்றுவிட்டாராம்.
இந்த குடியாத்தம் என்னுமிடம் தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது.
ஆக, காந்தி மனைவியைத் தேடி ஆந்திரா சென்ற நிலையில், அவர் இருக்கும் இடம் தெரியவரவே, ஞாயிற்றுக்கிழமை, தன் குழந்தையுடன் மனைவியை சந்திக்கச் சென்றுள்ளார்.
காந்தியைக் கண்டதும் அவரது மனைவியை அவருடன் அனுப்பிவைப்பதாகக் கூறிய நரசிம்முலு, அவரையும் குழந்தையையும் ஏமாற்றி வனப்பகுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
காந்தி, நரசிம்முலு மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து மது அருந்தியபின், குழந்தையின் கண் முன்னாலேயே காந்தியை அடித்துக் கொன்றுள்ளார்கள் நரசிம்முலுவும் அவரது நண்பர்களும்.
பயந்து நடுங்கிய குழந்தை புதர் ஒன்றின் பின்னால் மறைந்துகொண்டிருந்திருக்கிறான். தந்தையைக் கொன்றவர்கள் சென்றதும், அவரது உடல் அருகிலேயே இரவு முழுவதும் இருந்துள்ளான் அவன்.
காலையில் வெளிச்சம் வந்ததும், அங்கிருந்து வெளியே வந்த அந்தச் சிறுவன் அங்கு வந்த கிராம மக்களிடம் நடந்ததைக் கூற, கேட்ட மக்கள் குழந்தையின் நிலை கண்டு பதறிப்போயுள்ளார்கள்.
பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, பொலிசார் காந்தியின் உடலை மீட்டதுடன், நரசும்முலுவையும் அவரது நண்பர்களையும் கைது செய்துள்ளார்கள்.
கண் முன் தந்தை கொடூரமாக கொல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ள குழந்தை, அரசு காப்பகம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளான். பொலிசார் இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.