பேதங்களை மறப்போம்! வடக்கு மாகாணத்தின் எதிர்கால திட்டம் தொடர்பில் ஆளுநர்
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் இந்தப் புத்தாண்டில், அனைவரும் ஒன்றிணைந்து வளமான வடக்கு மாகாணம் என்ற இலக்கை அடைவோம் என்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இயற்கையோடு இணைந்து, சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் இந்தப் புத்தாண்டு, எமது பண்பாட்டோடு பின்னிப்பிணைந்த உன்னத திருநாளாகும். தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து கொண்டாடும் இப்பண்டிகையானது, இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் பாலமாக அமைகின்றது.
உலகளாவிய போர்ச் சூழலின் தாக்கம் எமது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள போதிலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சிறப்பான தலைமைத்துவத்தால் மக்கள் விரைவாக மீட்சி பெற்று வருகின்றனர்.
நாட்டு மக்கள் மீது மேலதிக பொருளாதாரச் சுமைகளைச் சுமத்தாமல் இருப்பதற்கான காத்திரமான நிவாரணங்களை அரசு வழங்கியுள்ளது.
புதியதொரு எதிர்காலம் வேண்டும்..
கடந்த கால சவால்களில் இருந்து மீண்டெழுந்து, வடக்கு மாகாணம் இன்று புதியதொரு எதிர்காலத்தை நோக்கித் துரிதமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. விவசாயம், கடற்றொழில், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் நாம் அடைந்து வரும் முன்னேற்றங்கள் இந்தப் புதிய ஆண்டில் மேலும் பலமடங்கு சிறக்க வேண்டும்.
பேதங்களை மறந்து, அனைவரினதும் ஒன்றுபட்ட உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் ‘வளமான வடக்கு மாகாணம்’ என்ற இலக்கை நாம் நிச்சயம் எட்டுவோம். நேர்மறையான சிந்தனைகள் எமது மாகாணத்தையும் நாட்டையும் பொருளாதார சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லட்டும்.
புதிய எதிர்பார்ப்புகளோடு பிறக்கும் இந்தப் புத்தாண்டு, மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சியையும் ஒளியையும் ஏற்றட்டும் என குறிப்பிட்டுள்ளார்.