;
Athirady Tamil News

அமெரிக்க துணை ஜனாதிபதியின் பாகிஸ்தான் பயணம் ரத்து

0

வாஷிங்டன்,

ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சரக்கு, கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, ஈரானின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்தை அமெரிக்கா முடக்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனிடையே, பேச்சுவார்த்தைக்காக 2 வாரங்கள் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். அதன்படி கடந்த 8ம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டது. அதன்படி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

அதேவேளை, 2 வார போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால், ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானில் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் பங்கேற்க உள்ளதாகவும், இதற்காக அவர் பாகிஸ்தான் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், பாகிஸ்தான் பயணத்தை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் ரத்து செய்துள்ளார். அமெரிக்கா – ஈரான் 2ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறவிருந்த நிலையில் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், பாகிஸ்தான் பயணத்தை ஜேடி வான்ஸ் ரத்து செய்துள்ளார். முன்னதாக போர் நிறுத்த ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் சமர்ப்பிக்கும்வரை தற்காலிகமாக போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.