இவ்வாண்டிலிருந்து ஐந்து ஆண்டு திட்டத்திற்கமைய யாழ். நகரம் அபிவிருத்தி செய்யப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
;
இலங்கையில் 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்திற்கு அமைய – வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக பங்குபற்றுனர்களுடன் கருத்துக்களை கேட்கும் கலந்துரையாடல் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்றைய தினம் (2026.04.22) பி. ப 03.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வரவேற்புரையாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், யாழ் நகரை இவ்வாண்டிலிருந்து 05 ஆண்டு திட்டத்திற்கமைய அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவ்வாண்டு முதற்கட்டமாக 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், தொடர்ந்து யாழ் நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பங்குதாரர்களுடன் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் பழைய பேருந்து நிலையம் தொடர்பாகவும், யாழ் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தின் திண்மக்கழிவு அகற்றலில் உள்ள பிரச்சனை தொடர்பாகவும் இதற்கான முன்மொழிவுகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் விரிவாக ஆராய்ந்தார். மேலும், போக்குவரத்து சேவைகளை இலகுபடுத்த யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேருந்துகளை (Metro Bus) வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.கபிலன், அமைச்சரின் இணைப்பாளர் எஸ்.ஸ்ரீவாகீசன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணப் பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
