விமான நிலையத்தை பரபரப்பாக்கிய 22 தேரர்கள் ; 110 கோடி ரூபா பெறுமதியான ஆபத்தான பொருட்கள் மீட்பு
தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹேஷ் ரக போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 தேரர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று சனிக்கிழமை (25) இரவு 10.10 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் மூலம் வருகை தந்த தேரர்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
சந்தை பெறுமதி
இதன்போது அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு தேரரின் பயணப் பொதியிலும் பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு நடுவே, சூட்சுமமான முறையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
மொத்தமாக 110 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சந்தை பெறுமதி சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேரரும் சுமார் 5 கிலோகிராம் போதைப்பொருளைத் தனித்தனியாகக் கொண்டு வந்துள்ளனர்.
இவர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் தேரர்கள் எனவும், உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று வருபவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி தர்மகர்த்தா ஒருவரால் வழங்கப்பட்ட விமான பயணச்சீட்டுகள் மூலம் இவர்கள் தாய்லாந்து சென்றுள்ளனர். தாய்லாந்தில் தங்கியிருந்த போது இவர்கள் சாதாரண உடையில பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர்களின் அலைபேசிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் இவ்வாறான பாரிய போதைப்பொருள் தொகை சிக்கிய முதல் சந்தர்ப்பம் இதுவெனக் கூறப்படுகிறது. அத்துடன், பெருமளவிலான தேரர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதும் இதுவே முதல் முறையாகும்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.