;
Athirady Tamil News

மட்டக்களப்பின் முக்கிய பகுதியில் இளைஞன் செய்து வந்த மோசமான செயற்பாடு ; வீட்டுக் கூரையில் சிக்கிய ஆதாரம்

0

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னாலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து பணம் மற்றும் கைபேசிகளைத் திருடி வந்த இளைஞன் ஒருவரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 24-ம் திகதி காந்தி பூங்கா பகுதி வாகன தரிப்பிடத்தில் இளைஞன் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதை அவதானித்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், அவரைப் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

மேலதிக விசாரணை
இதன்போது, நீதிமன்றங்களுக்குச் செல்பவர்களின் மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து அவர் திருட்டில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுணதீவு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் போலிச் சாவிகளைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களைத் திறந்து, அதிலுள்ள பணம் மற்றும் கைபேசிகளைத் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வவுணதீவிலுள்ள அவரது வீட்டில் தேடுதல் நடத்திய பொலிஸார் வீட்டுக் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைபேசி ஒன்றையும், 9,000 ரூபா பணத்தையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று சனிக்கிழமை (25) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, அவரை எதிர்வரும் மே மாதம் 08-ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் இருந்து 24 கிராம் தங்க ஆபரணங்கள் மற்றும் 3 கைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.