;
Athirady Tamil News

தட்டம்மை பரவல் குறித்து சுகாதார அமைச்சின் விளக்கம்

0

நாட்டில் தட்டம்மை (Measles) நோய் மீண்டும் பரவுவதைத் தடுப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தொற்றுநோய் தடுப்புப் பிரிவு மறுத்துள்ளது.

இது தொடர்பாக அந்தப் பிரிவின் சமூக மருத்துவ ஆலோசகர் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரண விளக்கமளித்துள்ளார்.

நாட்டில் தட்டம்மை மீண்டும் தலைதூக்குவதைத் தடுக்க அடிமட்ட அளவில் முறையான கண்காணிப்பு அமைப்பு நடைமுறையில் இருப்பதாக வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரண தெரிவித்துள்ளார்.

பொதுச் சுகாதார சேவைகளின் கீழ், நோயாளி ஒருவரை அடையாளம் கண்டால் அவரோடு தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

அத்துடன், குறிப்பிட்ட பகுதியில் வேறு நோயாளிகள் உள்ளனரா என்பதையும் உறுதிப்படுத்த அந்தந்தப் பகுதிகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த மாதத்தில் கண்டறியப்பட்ட இரண்டு தட்டம்மை நோயாளிகள் தொடர்பிலும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, இந்த இரண்டு நோயாளிகளும் தடுப்பூசிகள் குறித்த தவறான நம்பிக்கைகளைக் கொண்ட மற்றும் தடுப்பூசி செலுத்தத் தயங்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டிலும் இவ்வாறான தடுப்பூசிக்குத் தயக்கம் காட்டும் ஒரு சிறிய குழுவினரிடையே தட்டம்மை பரவல் ஏற்பட்ட போதிலும், அதனை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கண்டறியப்பட்டுள்ள வைரஸ் திரிபானது, பிராந்தியத்தில் உள்ள ஏனைய வைரஸ் திரிபுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என சோதனைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், 1984 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் தடுப்பூசித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலப்பகுதியில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தவறிய 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டோரிடையே பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது குழந்தைகளுக்கு தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி (mumps) மற்றும் ருபெல்லா ஆகிய நோய்களுக்கான முக்கூட்டு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.

இலங்கை 2019ஆம் ஆண்டில் தட்டம்மையற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

எனினும், பொதுச் சுகாதாரப் பிரிவினர் முறையான கண்காணிப்பைத் தொடராவிட்டால், மீண்டும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறை சார் தரப்பினர் எச்சரிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.