திருச்செந்தூர் முருகன் கோயிலில் த.வெ.க. தலைவர் விஜய் சாமி தரிசனம்
த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 23 ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் த.வெ.க. சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம்
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது த.வெ.க. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். எதிர்வரும் மே 4 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், விஜய் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை நகருக்கு அவர் சென்றுள்ளார்.
தொடர்ந்து அங்கிருந்து காரில் திருச்செந்தூர் சென்றார். அங்கு கடற்கரையில் கால்களை அவர் நனைத்தார். பின்னர் கோயிலிக்குள் சென்று மூலவரான சுப்பிரமணியசுவாமியை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. அவருடன் த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த், கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். அப்போது அவருக்கு வெற்றிவேல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
தரிசனத்தை முடித்துக் கொண்ட பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டார். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கடற்கரையோரம் அமைந்துள்ள ஸ்தலம் ஆகும். இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, முருகனை வழிபடுகின்றனர்.