மாணவிகளின் நடனத்தை தாங்காது இடிந்த கட்டிடம்; கிழக்கு பல்கலைக்கழகத்தின் பரிதாபம்!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியின் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில், நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூன்று மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் புதன்கிழமை 06 இடம்பெற்றுள்ளது. கல்லூரியின் நடனப் பயிற்சி மண்டபத்தில் இறுதி ஆண்டு மாணவிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. கட்டிடத்தின் மேல் மாடித் தளத்தின் (Slab) ஒரு பகுதி திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்துள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி
இதில் காயமடைந்த மூன்று மாணவிகளும் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தரமற்ற நிர்மாணம்: குறித்த கட்டிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் மேல் மாடியுடன் கூடியதாகத் திட்டமிடப்பட்டது.
எனினும் கீழ் பகுதி மாத்திரம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அதன் உறுதித்தன்மை குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. கட்டிடம் பாதுகாப்பானது அல்ல எனப் முறைப்பாடுகள் இருந்தபோதிலும், அது மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தின் தரம் குறித்து சர்ச்சைகள் வலுவாக எழுந்த நிலையில், அதனை நிர்மாணித்த பொறியியலாளர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிர்மாணக் குறைபாடுகளே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பெற்றோர் மற்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.