;
Athirady Tamil News

விஜய்யின் பதவியேற்பில் மீண்டும் இழுபறி ; போலி ஆதரவு கடிதம்! தூய சக்தி செய்யும் வேலையா இது?

0

சென்னை தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாக தனது எம்.எல்.ஏ பெயரில் போலி கடிதம் தயாரித்து, அது ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “எங்கள் எம்.எல்.ஏ பெயரில் தவறான ஆதரவு கடிதம் தயாரித்து, தவெகவினர் அதை ஆளுநரிடம் வழங்கியுள்ளனர். ராவணனை சீதை தூக்கிச் செல்வது போல எங்கள் எம்.எல்.ஏவை தூக்கியுள்ளனர்.

இது எந்த அளவுக்கு சரியான அரசியல்?” என கேள்வி எழுப்பினார். மேலும், ஆட்சி அமைப்பதற்கு முன்பே இவ்வாறான நடவடிக்கைகள் நடப்பது கவலைக்கிடமானது என்றும், இது “தூய சக்தி” என கூறப்படும் கட்சியின் செயல்பாடா எனவும் அவர் விமர்சித்தார்.

அத்துடன், தவெக அளித்துள்ள அனைத்து ஆதரவு கடிதங்களும் முறையாக சரிபார்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“இப்படிப்பட்ட மோசடிகள் மூலம் யாருடைய பெயரிலும் தவறாக செயல்பட முடியும் என்றால், இவர்களை நம்பி ஆட்சி ஒப்படைத்தால் என்ன ஆகும்? இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல,” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆளுநரிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளதாகவும், காவல் நிலையத்திலும் விரைவில் முறையான புகார் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.