பரீட்சாத்திகளின் விடைத்தாள் புள்ளிகள் தொடர்பில் நீதிமன்றின் வரலாற்று தீர்ப்பு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பரீட்சார்த்திகள் தங்களது விடைத்தாள்கள் மற்றும் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஆர். குருசிங்க மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் கடந்த 2026 மே 08ஆம் திகதியன்று இந்தத் தீர்ப்பை வழங்கினர்.
2023 ஜனவரி 08 அன்று நடைபெற்ற திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை தெரிவுப் பரீட்சையில் தோற்றிய தனது மகளின் விடைத்தாள்கள் மற்றும் புள்ளிகளை வழங்குமாறு ஆர்.ஏ. ஜனக ரொஷான் ரணசிங்க என்பவர் கோரியிருந்தார்.
எனினும், பரீட்சை விபரங்களை வெளியிடுவது அதன் இரகசியத்தன்மையைப் பாதிக்கும் எனக் கூறி பல்கலைக்கழகம் அதனை மறுத்திருந்தது.
அத்துடன், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு விடுத்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகம் மேன்முறையீடு செய்திருந்தது.
இதனை விசாரித்த நீதியரசர் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர தனது தீர்ப்பில், ஒரு பரீட்சார்த்தி தான் எழுதிய விடைத்தாளையும், அதற்கு எவ்வாறு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் கோரும்போது அதனை மறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவற்றின் படி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை மிக முக்கியமானவை.
இந்தநிலையில்,”உயர்கல்வி நிறுவனங்களில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட முடியாது” என நீதியரசர் தனது தீர்ப்பில் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நிறுவனத்தின் விதிகளை விட நாட்டின் பொதுவான சட்டமே மேலோங்கியது என நீதியரசர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை விடைத்தாள்களைப் பார்வையிட அனுமதி வழங்கினாலும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்த பரீட்சகர்களின் விபரங்களை இரகசியமாக வைத்திருக்க முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களைப் பார்வையிட பரீட்சார்த்திகளுக்கு உரிமை உண்டு என்ற விடயத்தில், இலங்கை மற்றும் இந்திய நீதிமன்றங்கள் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளது.
விடைத்தாள்களைக் காண்பிப்பதன் மூலம் பரீட்சை முறையின் நம்பகத்தன்மை அதிகரிக்குமே தவிர, அது இரகசியத்தன்மையைப் பாதிக்காது என்பது நீதிமன்றத்தின் கருத்தாகும்.
இந்தத் தீர்ப்பின் மூலம், இனிவரும் காலங்களில் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய பொது நிறுவனங்கள் நடத்தும் பரீட்சைகளில் மாணவர்கள் தங்களது பெறுபேறுகள் மற்றும் விடைத்தாள்கள் தொடர்பில் கூடுதல் வெளிப்படைத்தன்மையைக் கோர முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.