;
Athirady Tamil News

எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு

0

அரசாங்கத்தின் முக்கிய இலக்கு எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரிய சவால் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டில் ஒரு லீற்றர் டீசலின் விலை சுமார் 720 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், இருப்பினும் அரசாங்கம் மக்களுக்கு 392 ரூபாய்க்கே டீசலை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஒரு லீற்றர் டீசலுக்கு அரசாங்கம் சுமார் 100 ரூபாய் வரை சுமையை ஏற்றுக்கொள்வதால், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெரும் நட்டத்தைச் சந்தித்து வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், பெப்ரவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக 98 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட நிலையில், மே மாதத்தில் அது 522 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட முறையற்ற நிர்வாகத்தால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 84 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தச் சுமையை அரசாங்கமே ஏற்றுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பிலும் கருத்து வெளியிட்ட அவர், 18 சதவீத கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டபோதும், 95 சதவீத மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

தொடர்ச்சியாக திறைசேரி நிதியை பயன்படுத்தி எரிபொருள் கூட்டுத்தாபனத்தையும் மின்சார சபையையும் பராமரிக்க முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அவற்றை வினைத்திறன் மிக்க நிறுவனங்களாக மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

அதிக விலைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் சூழலில், அதன் பயன்பாடு கட்டுப்படுத்தப்படாவிட்டால் வெளிநாட்டு செலாவணி வெளியேற்றம் அதிகரிக்கும் என தெரிவித்த அவர், அதனால்தான் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான தீர்வுகளை விரைவில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.