;
Athirady Tamil News

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

0

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் 10 ஆம் தேதி வீட்டில் இருந்து இரவு வேளையில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக் கழிக்க சென்ற நிலையில், காணாமல் போனார். கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஒரு நாள் முழுவதும் தேடிய நிலையில், கடந்த 11 ஆம் தேதி அதே காட்டுப் பகுதியில் உடலில் பல்வேறு இடங்களில் காயத்துடன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தபட்டதற்கான அறிகுறிகளுடன் மாணவி உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு ரவுடி தர்ம முனீஸ்வரன் என்பவர் இந்த கொலையை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே கோவில்பட்டியில் ஒரு வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் ஆவார். அந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்று, தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில்தான் பிளஸ்-2 மாணவியையும் கொடூரமாகக் கொலை செய்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் தற்போது முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் இன்று அறிவித்தது.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் குற்றவாளி என தெரிவித்த நீதிமன்றம், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 2-ம் கூடுதல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தண்டனை விபரங்களை அறிவித்தார். குற்றம் நடந்த 76 நாட்களில் குற்றவாளிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.