;
Athirady Tamil News

தீவிரமடையும் தென்மேல் பருவமழை ; வெளியிட்ட அவசர மண்சரிவு அபாய அறிவிப்பு

0

நாட்டில் தென்மேல் பருவமழை நிலைபெற்றுள்ளமையால், தென்மேல் பகுதிகளில் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதனால், நாட்டின் பல பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என இத்திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும், சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாகச் சிலாபம் வரையான மற்றும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள குருவிட்ட, இரத்தினபுர, அயகம மற்றும் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் மத்துகம மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் தெரணியாகல, யட்டியாந்தோட்டை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் புலத்கொஹூபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத, நிவித்திகல, பெல்மடுல்ல, கிரியெல்ல மற்றும் கலவான பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களுகங்கையை அண்மித்துள்ள, மில்லகந்த பகுதிக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.