விடுவிக்கப்பட சாத்தியமுள்ள அனைத்து காணிகளையும் எமது அரசாங்கம் நிச்சயம் விடுவிக்கும் என கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக, மக்களின் சொந்த காணிகள் மற்றும் பொதுக் காணிகளில் இராணுவ மற்றும் கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவை நீண்ட காலமாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாமல் , இருப்பதனால் தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.
இதனால் கனிகளை விடுவிப்பது தொடர்பில் நேரில் சென்று ஆராயுமாறு , ஜனாதிபதி எங்களுக்கு பணித்துள்ளார்.
அதனால் மக்களின் காணிகளில் அமைந்துள்ள, முகாம்களை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள நிலவரங்களை ஆராய்ந்து, விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.
ஏனைய காணிகள் தொடர்பிலானதும் , எமது நேரடி ஆய்வுகள் தொடர்பிலும் அறிக்கைகளை பாதுகாப்பு அமைச்சுக்கு சமர்பிக்கவுள்ளோம்.
ஜனாதிபதி, விடுவிக்கக்கூடிய அனைத்துக் காணிகளையும் மீண்டும் மக்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பார்.
எத்தனை ஏக்கர் காணிகளை விடுவிப்போம் என திட்டவட்டமாக கூற முடியாது. இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், சில காணிகளில் சட்ட ரீதியான சிக்கல்கள் உள்ளன. அதேபோல், பாதுகாப்புக்குத் தேவையான முக்கிய காரணிகளும் உள்ளன.
எனவே, தற்போது நாம் இவ்வளவு ஏக்கர் என்று குறிப்பிட்ட அளவை நிர்ணயிக்கவில்லை. எனினும், விடுவிக்க கூடிய சாத்தியமுள்ள காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்