பொலிஸாருக்கு தண்ணீர் காட்டும் டிக்கோயா கொலையாளி!
ஹட்டன் – டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
மீண்டும் கைது செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள்
டிக்கோயா இரட்டைக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திடீர் நோய் காரணமாக கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்த சந்தேக நபர், மருத்துவமனையிலிருந்து தப்பியோடியுள்ளார். தப்பியோடிய சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், இந்த செய்திகளை காவல்துறை ஊடகப் பிரிவு முற்றாக மறுத்துள்ளதுடன், தப்பியோடிய சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.
ஹட்டன் – டிக்கோயா பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வசித்துவந்த கணவனும் மனைவியும் கடந்த வெள்ளிக்கிழமை (22) கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவர்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது