2005-ல் விண்ணப்பித்தவருக்கு ஓய்வு பெறும் வயதில் அரசு வேலைக்கு நியமன கடிதம்
திருவனந்தபுரம்: அரசு வேலைக்கான பணி நியமன கடிதம் என்பது பொதுவாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான தருணம் ஆகும். ஆனால், கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது ஓய்வுபெறும் வயதில் பணிநியமன கடிதம் கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காளிகாவு பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீத்துக்கு, மாநில பொதுச்சேவை ஆணையத்திடம் (பிஎஸ்சி) இருந்து பணி நியமன பரிந்துரைக் கடிதம் கடந்த மாதம் கிடைத்துள்ளது. பகுதிநேர இளநிலை அரபு மொழி ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில், மஜீத் 2005-ம் ஆண்டு (20 ஆண்டுக்கு முன்பு) பிஎஸ்சி தேர்வு எழுதியிருந்தார்.
மேலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் 2008-லேயே காலாவதியாகிவிட்டது என்பதுதான் சுவாரஸ்யம்.
இதுகுறித்து அப்துல் மஜீத் கூறும்போது ‘‘இந்த பணி நியமனக் கடிதத்தை அனுப்ப பிஎஸ்சி-க்கு 18 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த வேலை தற்போதைய நிலையில் எனக்கு எந்தப் பயனும் தராத அளவுக்குத் தாமதமாக வந்துள்ளது. எனக்கு 60 வயதைக் கடந்த பிறகு, அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணமே எனக்குள் இல்லாமல் போய்விட்டது’’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான அறிவிப்புகள் மற்றும் ஆட்சேர்ப்பு முயற்சிகளுக்குப் பிறகும், தகுதியான நபர்கள் கிடைக்காமல் காலியாக இருந்த ஒரு பணியிடத்துக்காகவே தற்போது மஜீத்துக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பிஎஸ்சி கடிதம் கிடைத்த 3 மாதங்களுக்குள் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து பணியில் சேர வேண்டும். ஆனால், மஜீத்தின் பள்ளிச் சான்றிதழின்படி அவரது பிறந்த தேதி மே 27, 1966. இதன் மூலம் அவர் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ஓய்வுபெறும் வயதைக் கடந்துவிட்டதால் இந்த நியமனத்துக்கு தகுதியற்றவர் ஆகிறார்.