மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி கைது
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ சேவை அதிகாரி ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க அனுமதி மற்றும் வரிகளைச் செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தை பதிவு செய்ய உதவியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத்திடம் அனுமதி பெறாமலும், பொருந்தக்கூடிய சுங்க வரிகளைச் செலுத்தாமலும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கார் ஒன்றை பதிவு செய்வதற்கு குறித்த நபர் உதவி புரிந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாகனத்தின் முதலாவது உரிமை மாற்றத்திற்குத் தேவையான கவுண்டர் இலக்கத்தை வழங்கியதோடு, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் அதனுடன் தொடர்புடைய தரவுகளை முன்னாள் அதிகாரி பதிவேற்றம் செய்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.