;
Athirady Tamil News

பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!

0

ரஷியாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் மீது உக்ரைன் நடத்திய பெரியளவிலான டிரோன் தாக்குதல்களால் வீடுகளில் உள்ள மக்களை வெளியே வரவேண்டாம் என ரஷியா எச்சரித்துள்ளது.

மேலும், இணைய வசதி துண்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பீட்டர்ஸ்பர்க் நகரில் 141 டிரோன்கள் இதுவரை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 376 உக்ரைனின் டிரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4 ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வரும் நிலையில் அதுதொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷியாவுக்கு உக்ரைன் அழைப்பு விடுத்திருந்தது. ரஷியப் படைகள் 2022-ல் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து புதினுக்கு முதல்முறையாக நேரடி கடிதம் எழுதிய ஸெலென்ஸ்கி, ரஷிய அதிபரின் 26 ஆண்டுகால ஆட்சியப் பற்றி கடுமையான விமர்சனங்களையும், அவரது வயதைக் கிண்டலடித்தும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அழைப்பு கடிதத்தை புதின் நேற்று (ஜூன் 6 ) நிராகரித்ததைத் தொடர்ந்து உக்ரைன் இன்று தாக்குதல்களை நடத்தியுள்ளது.

உக்ரைன் – ரஷியா இடையே நடைபெறும் மோதல் ரஷியாவின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கவில்லை என்று இதுவரை வெளியுலகிற்கு காட்டப்பட்ட நிலையில், தற்போது பீட்டர்ஸ்பர்க் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் ரஷிய அதிபர் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

உக்ரைன் நடத்திய தாக்குதல் காரணமாக பலியானோர் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

புதின் ஆண்டுதோறும் நடத்தும் முதலீட்டாளர்கள் கண்காட்சியான ‘சர்வதேச பொருளாதார மன்றம்’ பீட்டர்ஸ்பர்க் நகரில் தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்பு அந்நகரின் எண்ணெய் முனையம் ஒன்றின் மீதும் கப்பல் தளம் மீதும் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்தே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 272 டிரோன்களில் 249 -ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் இன்று தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.