36 நாட்கள் கடலில் தத்தளித்த தந்தை, மகன் பங்களாதேஷில் மீட்பு
இலங்கை மீனவர்கள் இருவர் 36 நாட்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்து மிதந்து கொண்டிருந்த நிலையில் பங்களாதேஷ் மீனவர் குழுவொன்றினால் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவரும் தந்தை மற்றும் மகன் எனத் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்டவர்கள் தெவிநுவரைப் பகுதியைச் சேர்ந்த 51 வயதான எஸ்.எச். சமிந்த மற்றும் அவரது 30 வயதுடைய மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை
கடந்த 23 ஆம் திகதி இரவு 10:00 மணியளவில் வங்காள விரிகுடாவின் சோனாசார் பகுதிக்கு அருகில் மிதந்து கொண்டிருந்த போதே பங்களாதேஷ் மீனவர்களால் இவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் பங்களாதேஷ் மீனவர்களின் படகில் ஏற்றப்பட்டு மஹேஷ்காலி கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
உணவு மற்றும் குடிநீர் இல்லாத நிலையில், கடலில் கழித்த 36 நாட்களும் மீன்களை உண்டு இவர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந் நிலையில் மீட்கப்பட்டவர்கள் உண்மையில் 36 நாட்கள் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கழித்தார்களா என்பது குறித்தும் பங்களாதேஷ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பங்களாதேஷ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.