;
Athirady Tamil News

வவுனியா கோவில்குளத்தின் நீரேந்து பகுதி ஆக்கிரமிப்பு: நீர்வரத்து தடைப்படும் அபாயம் எனக் கூறி கமக்காரர்களும் பொதுமக்களும் போராட்டம்!

0

வவுனியா நிருபர்

வவுனியா, கோவில்குளத்தின் நீரேந்து பகுதி பெண் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு அப்பகுதியில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், குளத்திற்கு இயற்கையாக வரும் நீர்வரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அப்பகுதியின் கமக்காரர் அமைப்பினரும் பொதுமக்களும் இன்று (06) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான இந்தப் போராட்டம், பேரணியாக வவுனியா மாவட்ட செயலகம் நோக்கிச் சென்றது. அங்கு போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகள் உள்ளடக்கிய மகஜரை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களிடம் கையளித்தனர்.

குளத்தின் நீரேந்து பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய பொதுச் சொத்தாகும் என்றும், அப்பகுதியில் இடம்பெறும் ஆக்கிரமிப்புகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் குளத்திற்கு வரும் நீர்வரத்து பாதிக்கப்படுவதுடன் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் கமக்காரர் அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், மகஜரைப் பெற்றுக் கொண்ட வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தார்.

ஆர்பாட்டத்தில் கிராமத்தின் பொது அமைப்புக்கள், பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.