;
Athirady Tamil News

ஆசிரியரின் காருக்கு தீ வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு ; 8 வயது சிறுவன் தொடர்பில் பொலிஸ் விளக்கம்

0

குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கு காணப்பட்ட 8 வயது சிறுவனுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த சிறுவன் காரை தீயிட்டு எரித்ததாகக் கூறப்படுவதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 3ஆம் திகதி குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இதன்போது, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் காணப்படும் சிறுவன், குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவன் என்பதும், சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அவர் காரின் அருகே நடந்து சென்றதும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், அந்த சிறுவனே காருக்கு தீ வைத்தார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு நேரடி சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.