காலியில் கரையொதுங்கிய வெற்று கொள்கலன் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றிலிருந்து கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் ஒன்று காலி, இந்துருவ – கைகாவல கடற்கரைப் பகுதியில் இன்று (02) கரை ஒதுங்கியுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிக கப்பலில் இருந்து குறித்த 17 வெற்று கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நேற்று (01) அறிவித்திருந்தது.
நிலவும் கடல் நீரோட்டத்தின் தன்மையை கருத்தில் கொள்ளும்போது, குறித்த கொள்கலன்கள் பேருவளை முதல் நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கரையோரப் பகுதிகளை நோக்கி மிதந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கடலில் மிதந்து வந்த ஒரு கொள்கலன் இன்று காலி இந்துருவ, கைகாவல கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.
கடலில் இருந்து கரை ஒதுங்கும் குறித்த கொள்கலன்களை பொதுமக்கள் தொடவோ அல்லது நகர்த்த முயற்சிக்கவோ வேண்டாம் எனவும், அவை தொடர்பில் அருகிலுள்ள அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எஞ்சியுள்ள கொள்கலன்களின் நிலைமை தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.