;
Athirady Tamil News

க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளின் நலன் கருதி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

0

சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக, 2026ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை சாஹிராக் கல்லூரியில்   நேற்று    விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜே. மதன் தலைமையில் இடம்பெற்ற இத்திட்டத்தில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கொசு களத்தடுப்பு உதவியாளர்கள் மற்றும் சுகாதார பணிமனைச் சாரதி உள்ளிட்ட குழுவினர் இணைந்து பாடசாலை வளாகத்தில் விரிவான டெங்கு கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இடம்பெற்ற சோதனைகளின் போது பாடசாலை நிருவாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு டெங்கு நோய் பரவலுக்கான காரணிகள், அதன் தீவிரத் தாக்கம் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, வாரந்தோறும் பாடசாலைச் சுற்றுப்புறங்களைச் தூய்மையாக வைத்திருத்தல், நீர் தேங்கக்கூடிய பொருட்களை அகற்றுதல் மற்றும் கொசு இனப்பெருக்க இடங்களை முற்றாக ஒழித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவம் இங்கு வலியுறுத்தப்பட்டது.

டெங்கு ஒழிப்பு என்பது சுகாதாரத் துறையின் பொறுப்பு மட்டுமல்லாது, சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரினதும் பங்களிப்பும் அவசியமான பொதுச் சுகாதாரப் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்ட சுகாதார வைத்திய அதிகாரி, டெங்கு அற்ற சாய்ந்தமருதை உருவாக்கும் நோக்கில் பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.