;
Athirady Tamil News

சொகுசுக் காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் சம்மாந்துறையில் கைது

0

சொகுசு காரில் சட்டவிரோத மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

(7 மாடுகள், 2 ஆடுகள் மற்றும் சொகுசு கார் பொலிஸாரினால் மீட்பு)

சொகுசு காரைப் பயன்படுத்திச் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச் சென்று இறைச்சிக்காக விற்பனை செய்துவந்த குற்றச்சாட்டில் 25 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களைச் சம்மாந்துறை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ‘ஐஸ்’   போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த விலங்குத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இத்திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

திங்கட்கிழமை (10) இடம்பெற்ற இந்தச் சோதனையின் போது, மாடுகளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் அதிலிருந்த மாடுகளையும் பொலிஸார் முதற்கட்டமாகக் கைப்பற்றினர். பொலிஸாரைக் கண்டதும் காரில் வந்த இருவர் தப்பியோடியபோதிலும், பொலிஸார் தீவிரத் தேடுதல் வேட்டையை நடத்தி அவர்களை விரைவாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5 கிராம் 430 மில்லிகிராம் மற்றும் 5 கிராம் 150 மில்லிகிராம் என மொத்தம் 10 கிராம் 580 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளின் மூலம் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், 7 மாடுகள் மற்றும் வங்காமம், இறக்காமம் ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆடுகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் போதைப்பொருள் வியாபார வலையமைப்புடன் தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும், பகுதி சார்ந்த விலங்குத் திருட்டுகள் குறித்தும் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்ன, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல ஆகியோரின் உத்தரவுக்கமைய, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சி   வழிகாட்டலில்  கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார் அவர்களின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.